Saturday, August 29, 2020

எழுத்தாளர் தி.ஜானகிராமன் நூற்றாண்டை முன்னிட்டு அவரது எழுத்துக்களை அறிமுகப்படுத்தும் முயற்சியாக உங்களது வாசிப்பிற்காக அவரது சிறுகதை ஒன்று...

நேத்திக்கு

(கணையாழி – ஆகஸ்ட், 1969)

குதிரை ரேஸுக்கு அடிமையாகி, சொத்து, சொந்தபந்தங்களை இழந்தவர்கள் கதைகள் ஏராளம். லட்சக்கணக்கில் பணம் ஜெயித்தும், மனம் வருந்தும் ஒரு சூழ்நிலையை, இந்தக் கதையில் தி.ஜா. சொல்கிறார்.

பணக்கார மேல்தட்டு மனிதர்களின் பொழுதுபோக்கான குதிரைப்பந்தய சூதாட்டத்தை, மிக நுணுக்கமாக விவரிக்கிறார். அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கைகள், கேலிகள், கோபங்கள், நேயங்கள் எனப் போகிறபோக்கில், சின்னச் சின்ன உரையாடல்களில் கதையின் ஓட்டத்தோடு தி.ஜா. சொல்லிவிடுகிறார்.

பெரிய பேக்டரி ஓனர், பாரீஸ், கனோசி என்று உலகைச் சுற்றியவர், ராமாயணம் கேட்பவர், தப்புத் தப்பா தாளம் போட்டு சபாவில் கச்சேரி கேட்பவர், ஆபீஸ் ரூமில் சோடாவுடன் மது அருந்துபவர், குளித்தவுடன் கனகதாராஸ்தவம் படிப்பவர், லக்‌ஷ்மீ பரதேவதேன்னு கும்பிடுபவர் – மெளலி – குதிரை ஒன்றை வைத்துக்கொண்டு கிண்டியில் ரேஸ் ஆடுபவர் – ரேஸுக்கு ஜோஸ்யம் பார்ப்பவர்! ஜாக்கி ராண்டால், ஜோஸ்யர் சங்கர் தீட்சித், சொந்தக் குதிரை லக்‌ஷ்மிதேவி – பாட்டி, பேத்தி ஜிங்கிலி இவர்களைச் சுற்றி அன்றைய குதிரைப் பந்தயத்தில் நடப்பதே கதை! பேத்தியின் பார்வையில் – அது குழந்தையின் நியாயமான, கனிவான பார்வை – பாத்திரங்களின் எல்லா முரண்களையும் காட்டி நம்மைத் திகைக்க வைக்கிறார்!

மூணு வருஷம் ஆகியும், சரியாக ஜெயிக்காத சனியன் (குதிரை), பங்களூர், கல்கத்தாவிலும் தோல்வி, இன்னிக்கு மட்டும் ஜெயிக்குமாக்கும் – ‘இது குதிரையா, கோவேரி கழுதையான்னே இப்பல்லாம் சந்தேகமா இருக்குங்காணும்’ – தாத்தாவின் அங்கலாய்ப்பு!

‘இன்னிக்கு சனிதான் அசாத்ய பலமாக இருக்கான். அவந்தான் இன்னிக்கு ஜயகாரகன், தனகாரகன். இன்னிக்கு சனிதான் லக்‌ஷ்மிதேவியை முதல்லெ கொண்டு நிறுத்தப்போறான். நியூமராலஜி, தாரை, சந்திரன் ஹோரை எல்லாம் அப்படியே தங்கமா சொட்றது’, ‘நம்ம ஜாக்கிக்கும் பிரம்மாத யோகமான்னா இருக்கு இன்னிக்கு’ன்னார் ஜோஸ்யர் மாமா! இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத ஜாக்கி, ’குதிரை என்னைக் குப்புறத் தள்ளி மிதிச்சாலும், நான் இதையெல்லாம் நம்பமாட்டேன்’ என்கிறார்! இருவருக்கும் ஜெயித்தால்தான் நல்லது – ஆனாலும், நம்பிக்கைகளில் முரண்கள்!

ஜரிகைப் பாவாடை, புதுச்சட்டை, பவுடர், மை எல்லாம் ஜிங்கிலிக்குப் போட்டு, பாட்டியும் மருக்கொழுந்து செண்ட் போட்டுண்டு (‘மரணக் கொழுந்து செண்டு வாசனை அடிக்கிறதே’ – தாத்தா கிண்டல்!), காரில் ரேஸ் பார்க்கப் போகிறார்கள்! புக்கிகளிடம் பேரம் பேசி, லக்‌ஷ்மி மீது ஆயிரக்கணக்கில் பணம் கட்டுகிறார் தாத்தா.

தி.ஜா.வின் விவரணைகளில், ரேஸ்கோர்ஸில், பார்வையாளர்கள், புக்கீஸ், ஜாக்கிகள், கூச்சல்கள், (சிட்டுக்குருவி கத்தறபோதெல்லாம் வாலை வாலைத் தூக்குமே, அந்த மாதிரி கீழே எல்லாரும் கையை கைய ஆட்டிக் கத்திண்டிருந்தா!), பாட்டி, பேத்தி, பைனாகுலர், தாத்தாவின் ’லக்‌ஷ்மி – கம்மான், கம்மான்’ கூச்சல் – ஆகியவற்றுடன் நாமும் ஒன்றிவிடுகிறோம்!

அன்று, லக்‌ஷ்மி ‘பஸ்டு’ வந்து, தாத்தாவுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைத்துவிடுகிறது – இனிமேல்தான் தி.ஜா.வின் கை வண்ணத்தில் அவரது கூரிய பார்வை..

ஜெயிச்ச லக்‌ஷ்மி, கம்பத்தைத் தாண்டி அம்பதடி போனப்புறம், இரண்டு கால்களையும் மடக்கிண்டு விழுந்துவிடுகிறது. உடைந்த கால்கள் – குதிரைக்கு ‘ஷூட்’ ஆர்டர்.

தாத்தாவுக்கும் பாட்டிக்கும் வருத்தம். ‘இப்படி வாரி வாரிக் கொடுத்துட்டு, என் கையாலெ ஒரு பாட்டில் ரம் சாப்பிடப்படாதா? அப்படியே யமலோகத்துக்கு ஓடிப்போயிட்டாளே!’ என்கிறார் தாத்தா. ‘ஓடிப்போயிட்டாளா – சுட்டுன்னா அனுப்பிச்சேள்?’ என்கிறாள் பாட்டி!

வீட்டுக்கு வந்து, லக்‌ஷ்மி படத்துக்கு முன்னால் பணம், செக்கெல்லாம் வைக்கிறார். ஸ்தோத்திரம், கோயில்கள், ஆபீஸ் உள்ளே ‘பில்ஸ்’ன்னு சோடா, ஜோஸ்யர் எனத் தொடர்கிறது தாத்தாவின் வாழ்க்கை!

பேத்தி ஜிங்கிலி மூலமாக தி.ஜா. எழுப்பும் கேள்விகள் அசாதாரணமானவை. பாட்டியிடம் கனகதாரா ஸ்தோத்திரம் பற்றிக் கேட்டுக்கொள்கிறது. காரில் போகும்போது, மேகங்களை ரசிக்கிறது. குதிரையிடம் தாத்தா, ‘இன்னிக்குத் தோத்தா, ‘மூதேவி’ன்னு பேர் வெச்சு, ஜட்காக்காரன்கிட்டெ வித்துடப்போறேன் – அப்புறம் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு முன்னாலெ சாக்கடைப் புல்லெல்லாம் கடிச்சிண்டு, சாவுக்கிராக்கியைத்தான் தூக்கிண்டு போகணும்’ என்கிறார். (பணம் ஜெயித்துக் கொடுத்தபோது,’ ரம் கொடுத்திருப்பேனே’ என்கிறார் அதே தாத்தா!). அப்போது ஜிங்கிலி, ‘சாவுக்கிராக்கின்னு டாக்சிக்காரன் மாதிரியெல்லாம் சொல்லாதீங்கோ தாத்தா’ என்கிறாள். ‘தோத்தாக்க, நம்மாத்துலே வச்சுக்கப்படாதா? நான் ஸ்கூலுக்குக் குதிரை வண்டியிலே போகமாட்டேனா?’ – கேள்வியின் தீவிரம் ‘சட்’டென்று நம்மைச் சுடுகிறது!

குதிரையைச் சுட்டதற்குக் காரணம் சொல்கிறார் தாத்தா.. அப்போது ஜிங்கிலி, ‘ஏன் தாத்தா, நான் பள்ளிக்கூடத்திலே விளையாடறபோது, கீழே விழுந்து காலை ஒடிச்சுனூட்டேன்னு வச்சுக்குங்கோ..’ – இந்தக் கேள்விக்கு, தாத்தா, பாட்டியிடம் மட்டும் இல்லை, யாரிடமும் பதில் இல்லை. ‘குழந்தையும் தெய்வமும் ஒண்ணு’ – அந்த மனசு, பரிவு, பாசம், உயிர்களை நேசிக்கும் குணம் – இவையே தி.ஜா.வின் கதையின் அடிநாதம் எனப் படுகிறது – இன்னொருமுறை ‘சிலிர்ப்பு’ ஏற்படுகிறது!


No comments:

Post a Comment